நமது நாட்டில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்கீழ் தற்போது 5, 12, 18, 28 என 4 அடுக்கு வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சில பொருட்களுக்கு இந்த வரிவிதிப்பு முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.அவற்றில் பெட்ரோல், டீசல், விமான பெட்ரோல், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகிய 5 பொருட்களும் அடங்கும்.
இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளின் வரிகள்தான். மத்திய அரசின் கலால் வரியும், மாநில அரசுகளின் மதிப்புகூட்டிய வரியும்தான் பெட்ரோல் விலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க மறுத்து வருகிறது. இதே போன்று பல மாநில அரசுகளும் மதிப்பு கூட்டிய வரியை குறைக்க மறுக்கின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியவில்லை. பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். சரக்கு, சேவை வரிவிதிப்பின்கீழ் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் ஒரு ‘ரிட்’ வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு, இவற்றை ஜி.எஸ்.டி. வரம்பின்கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், வரும் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற உள்ளது. 20 மாதங்களுக்கு பிறகு இந்த கூட்டம் முதன் முதலாக காணொலி காட்சி வழியாக இன்றி நேரடியாக நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், பெட்ரோல், டீசல் உள்பட அனைத்து பெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி. வரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் அப்படி இவற்றை ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டு வந்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். தங்கள் வருமானத்துக்கு இழப்பு ஏற்படுத்துகிற அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஏனென்றால், மத்திய, மாநில அரசுகள் இந்த வரி வருவாயை பெருமளவில் கொண்டுள்ளன. இவற்றையே நம்பியும் உள்ளன.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.32.80-ம், டீசல் மீது ரூ-31.80-ம் மத்திய அரசு உற்பத்தி வரி வசூலிக்கிறது. இதில் மாநில அரசுகளுக்கு பங்கு தருவதில்லை.
ஆனால் ஜி.எஸ்.டி. என்றால் இரு தரப்பும் தலா 50 சதவீதம் என்ற அளவுக்கு சரக்கு, சேவை வரியை பகிர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.