பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது

சுமார் 663 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பெட்ரோல் மற்றும டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என மத்திய மந்திரி நேற்று அறிவித்தார்.

மத்திய மந்திரி நேற்று அறிவித்த நிலையில், விலை குறைப்பு தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 88 காசுகள் குறைக்கப்பட்டு 100 ரூபாய் 75 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 90 காகள் குறைக்கப்பட்டு 92 ரூபாய் 34 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் போக்குவரத்து செலவிற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் சற்று மாற்றம் இருக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய செலாவணி உள்ளிட்டவைகளை கணக்கிட்டு மாதத்திற்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. அதன்பின் ஆயில் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது.

ரஷியா- உக்ரைன் போர் காரணமாக ரஷியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகள் விதித்தன. மேலும் கச்சா எண்ணெய் ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தன.

ஆனால், இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை. ரஷியா இந்தியாவுக்கு மானிய விலையில் கச்சா எண்ணெய் வழங்கியது. அதேவேளையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.

இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டிய நிலையில், குறைக்காமல் அதேவிலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools