பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக மாறாமல் இருந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என மத்திய மந்திரி அறிவித்தார். அதன்படி இன்று காலை முதல் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் சமையல் சிலிண்டர் விவகாரத்தில் பா.ஜனதா என்ன செய்ததோ? அதே சாதுரியத்தை இதிலும் கடைபிடித்துள்ளனர் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பியும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
கடந்த வாரம் நான் ஊடக சந்திப்பின்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் எனக் கூறியிருந்தேன். அதன்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தலுக்குப் பிறகு இதன் விலை உயர்த்தப்படமாட்டாது என்று இந்த அரசு சொல்லுமா?
பா.ஜனதா அரசால் சமையல் சிலிண்டர் விலை 700 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தேர்தலுக்கு முன்னதாக 100 ரூபாய் குறைத்துள்ளது. அதே சாதுரியத்தை பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் கையாண்டுள்ளது.
இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.