பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வந்த சூழலில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்றுமதி குறைந்ததால் அனைத்து நாடுகளிலும் உற்பத்தி பெருமளவில் குறைந்திருக்கிறது.

இதனால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை குறைந்துள்ள நிலையில், சவுதி அரேபியா உற்பத்தியை அதிகரித்திருப்பதால் போட்டி காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால், அதன் பயன்களை நுகர்வோருக்கு வழங்க எண்ணெய் நிறுவனங்கள் மறுக்கின்றன.

கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பதை மிகவும் எளிதாக நிரூபிக்க முடியும். கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 61.13 டாலர் எனும் நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.35.65 ஆகும்.

இதில் சுத்திகரிப்பு மற்றும் வாகன வாடகை செலவுகளும் அடக்கம் ஆகும். அதன் மீது கலால் வரி ரூ.19.98, விற்பனையாளர் கமிஷன் ரூ.3.52 ஆகியவற்றுடன் தமிழக அரசின் 32.11 சதவீதம் விற்பனை வரியாக ரூ.18.98 சேர்த்து தான் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.12-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய சூழலில் கச்சா எண்ணெய் விலை 30.20 டாலர் தான் என்பதால், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ.17.66 மட்டுமே. அத்துடன் அதன்மீது கலால்வரி ரூ.19.98, விற்பனையாளர் கமிஷன் ரூ.3.52 ஆகியவற்றுடன் தமிழக அரசின் 32.11 சதவீதம் விற்பனை வரியாக ரூ.13.21 சேர்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.54.37-க்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், ரூ.18.91 கூடுதலாக விற்கப்படுகிறது. இது மிகவும் அநியாயமாகும்.

அதேபோல், இன்றைய நிலையில் ஒரு லிட்டர் டீசலின் உற்பத்திச் செலவு ரூ.19.10 மட்டுமே. அதனுடன், மத்திய கலால் வரி ரூ.15.83, விற்பனையாளர் கமிஷன் ரூ.2.47 மற்றும் மாநில அரசின் 24.04 சதவீதம் விற்பனை வரி ரூ.8.99 சேர்த்தால் ஒரு லிட்டர் டீசல் ரூ.46.39-க்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், அதைவிட ரூ.21.20 கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

இயல்பாக விற்கப்பட வேண்டிய விலையை விட 50 சதவீதம் அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்யப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.17.66 மட்டுமே. ஆனால், அதைவிட 4 மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அடக்கவிலையை விட அதிகமாக மத்திய அரசும், மாநில அரசும் வரி வசூல் செய்கின்றன.

அதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலை குறைவை கணக்கில் காட்டாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.32 என எண்ணெய் நிறுவனங்கள் கணக்கு காட்டுகின்றன. இந்த வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.15 மறைமுக லாபம் கிடைக்கிறது.

இந்த மறைமுக லாபத்தின் பெரும் பகுதியை அரசின் கணக்கில் சேர்க்கும் வகையில் கலால்வரியை கணிசமாக, அதாவது குறைந்தது ரூ.10 வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இது ஏற்க முடியாதது ஆகும். பொருளாதார மந்தநிலை காரணமாகவே கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

இதனால் கிடைக்கும் பயன்கள், பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்படக்கூடிய சாதாரண மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அனைத்தையும் அரசே அனுபவிக்கக்கூடாது.

எனவே, கச்சா எண்ணெயின் விலை சரிவை கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு தலா ரூ.20 வீதம் குறைக்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் முன்வர வேண்டும். இனி வரும் காலங்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news