பெங்களூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 13 பள்ளிகளுக்கு பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் கடிதம் இன்று அதிகாலையில் வந்தது. இதை பார்த்து பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். முன் எச்சரிக்கையாக பள்ளி ஊழியர்கள் அனைவரும் பள்ளியை விட்டு வெளியேறி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவல் பள்ளியை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காட்டுத்தீப்போல் பரவியது. இதனால் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி நுழைவு வாயில் முன்பு குவிந்தனர். மேலும் அங்கு பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

போலீசார் விரைந்து சென்று அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு இருக்கிறதா என வகுப்பறைகள், கழிப்பிடம், சமையல் அறை, பள்ளி விடுதி மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை செய்தனர்.

சோதனையின்போது ஒவ்வொரு நிமிடமும் திக், திக் என இருந்தது. காலையில் தொடங்கிய இந்த சோதனை வெகுநேரம் நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசார், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் நிம்மதி அடைத்தனர்.

மின்னஞ்சல் அனுப்பி மர்ம நபர் புரளியைக் கிளப்பி இருப்பது தெரியவந்தது. இந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் ஐ.டி.யை கம்ப்யூட்டரில் இருந்து கைப்பற்றி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியது யார்? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். பள்ளிக்கூடம் ஒன்று எனது வீட்டிற்கு எதிரே உள்ளது, இதை ஆய்வுசெய்ய இங்கு வந்தேன். இது சில மர்ம நபர்களின் போலி அழைப்பு போல் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர் என குறிப்பிட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news