Tamilசெய்திகள்

பெங்களூர் அருகே ரூ.1.28 கோடி மதிப்பில்லான கள்ள நோட்டுகளை கடத்தி வந்த கும்பல் கைது

கர்நாடகம்-தமிழக எல்லையில் பெங்களூரு அருகே உள்ள சித்தாபுரா பகுதியில் நல்லக்கனி (வயது 53) என்பவர், நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதே அலுவலகத்தில் சுப்பிரமணியன் (60) என்பவர் ஆடிட்டராக இருந்து வந்தார். இவர்கள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஒரு சதவீத வட்டிக்கு கடன் தருவதாகவும், நகைக்கு கடன் தருவதாகவும் கூறினார்கள். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சித்தாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையில், பெங்களூருவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக காரில் சிலர் வருவதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்குள்ள அத்திப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு காரில் கத்தை, கத்தையாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளுடன் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் ரூ.1 கோடியே 28 லட்சத்து 68 ஆயிரத்திற்கு கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள். விசாரணையில் அவர்கள் சித்தாபுராவில் நிதி நிறுவனம் நடத்தி வந்த நல்லக்கனி (வயது 55), சுப்பிரமணியன் மற்றும் அஜய்சிங் (48) என்பதும், இவர்கள் நெல்லையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. நல்லக்கனி, கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலின் தலைவன் ஆவார். கள்ள நோட்டுக்களை பெங்களூருவுக்குள் கொண்டு வந்து, அவற்றை கொடுத்து அதற்கு பதிலாக நல்ல ரூபாய் நோட்டுக்களை பெற்று செல்வதற்காக முடிவு செய்திருந்தார்.

கள்ளநோட்டுகளை மாற்றுவதற்காக சித்தாபுராவில் அலுவலகம் அமைத்திருந்தார். அப்பகுதி மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன், நகைக்கடன் கொடுப்பதன் மூலமாக கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு, கடன் வசூலிக்கும்போது, அவர்களிடம் இருந்து நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் 3 பேரும் திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக தாங்கள் அச்சடித்து வைத்திருந்த கள்ளநோட்டுகளை காரில் கொண்டு வந்தபோது போலீசாரிடம் சிக்கி கொண்டனர் என்பது தெரியவந்தது. கைதான 3 பேரிடமும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.