X

பெங்களூர் அணிக்கு விராட் கோலி நன்றி சொல்ல வேண்டும் – கவுதம் காம்பீர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 சீசன் முடிவடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் தலா மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் முக்கியமான வீரர்கள் விளையாடினாலும் அந்த அணியால் வெற்றி மகுடம் சூட்ட முடியவில்லை. இந்திய அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி, கடந்த 2013-ல் இருந்து அந்த அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்

கோப்பையை பெற்றுக்கொடுக்காவிடிலும் தொடர்ந்து விராட் கோலியை அந்த அணி கேப்டனாக வைத்து வருகிறது. அதற்காக விராட் கோலி அந்த அணிக்கு நன்றி சொல்ல வேண்டும் என கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘விராட் கோலியை டோனி மற்றும் ரோகித் சர்மா உடன் ஒப்பிடக்கூடாது. அதற்கு இன்னும் நீண்ட காலம் செல்ல வேண்டியுள்ளது. விராட் கோலியை சிறந்த அல்லது சூழ்நிலையை சிறப்பாக சமாளிக்கும் கேப்டனாக நான் பார்க்கவில்லை. அவர் இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை.

அவரது சாதனையை வைத்துதான் சிறந்த கேப்டனா? என்பதை தரம் பார்க்க முடியும். அந்த வகையில் விராட் கோலி இன்னும் கோப்பை வெல்லவில்லை. எம்எஸ் டோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியார் தலா மூன்று முறை சாம்பியன் கோப்பையை வென்றுள்ளனர். ரோகித் சர்மா மற்றும் டோனியுடன் விராட் கோலியுடன் ஒப்பிட இயலாது. ஏனென்றால் ஆர்சிபி அணிக்காக அவர் கடந்த 7 சீசனில்தான் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

விராட் கோலி மிகவும் அதிர்ஷ்டசாலி. அத்துடன் ஆர்சிபி அணிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இன்னும் அவரை கேப்டனாக வைத்துள்ளது. ஒரு அணிக்காக கோப்பையை வென்று கொடுக்க முடியாதவர்கள் ஒரு அணியில் அதிக வருடங்களாக கேப்டனாக நீடிக்க முடியாது.

ஐபிஎல் தொடரில் தவறான முடிவு எடுத்தால், பின்னர் தோல்வியடைய வேண்டியதுதான். மிகப்பெரிய போட்டிகளில் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக இல்லை. சரியான பேலன்ஸ் கொண்ட அணியைத் தேர்வு செய்யும்போது, அந்த அணி ஐபிஎல் தொடரை வெல்லும்’’ என்றார்.