X

பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டியவர்களின் எண்ணிக்கை 3½ – சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் மாதம் ஒரு மெகா சிறப்பு முகாம் என்ற அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடந்தன. இந்த மாதம் முதல் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்கு மட்டும் இலவசமாக போடும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த மாதத்துடன் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நிறைவடைகிறது. அதனால் அதனை வேகப்படுத்தும் வகையில் வாரந்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 1 லட்சம் மையங்களில் முகாம் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்து உள்ளது. பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதி உள்ளவர்கள். அந்த வகையில் நேற்று நிலவரப்படி தமிழகத்தில் 26 லட்சத்து 14 ஆயிரத்து 270 பேர் முதல் தவணை தடுப்பூசியே போடாமல் உள்ளனர். 86 லட்சத்து 62 ஆயிரத்து 534 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

முன் எச்சரிக்கை என்று சொல்லக்கூடிய பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதி படைத்தவர்களாக 3 கோடியே 49 லட்சத்து 29 ஆயிரத்து 305 பேர் உள்ளனர். முதல் மற்றும் 2-ம் தவணை செலுத்திவிட்டு பூஸ்டர் தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் அதிகமாக இருப்பது கவலை அளிப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்திவிட்டு பூஸ்டர் தடுப்பூசி போடாமல் 3½ கோடி பேர் இருக்கிறார்கள். மத்திய அரசு வழங்கியுள்ள வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த மாதம் வரை மட்டும் தான் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போட முடியும். எனவே, அதனை தீவிரப்படுத்தும் வகையில் வாரந்தோறும் மெகா சிறப்பு முகாம் மீண்டும் நடத்தப்படுகிறது. 4-ந்தேதி நடைபெறும் முகாம்களில் அதிகளவு பொதுமக்கள் பயன்பெற வேண்டும். அதற்கான முயற்சிகள் மாவட்டம் தோறும் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரையில் போடாதவர்களும், 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களும் தங்கள் பகுதியில் உள்ள முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.