பூரி ஜெகநாதர் சிலையை பயன்படுத்தி பிரசாரம்! – பா.ஜ.க வேட்பாளர் மீது காங்கிரஸ் புகார்

பாராளுமன்ற தேர்தலையொட்டி, பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக செய்தி தொடர்பாளரும், ஒடிசா மாநிலம் பூரி தொகுதியின் வேட்பாளருமான சம்பீத் பத்ரா சமீபத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பூரி ஜெகநாதர் சிலையை பயன்படுத்தி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையரிடம் அவர் மீது புகார் அளித்துள்ளனர். இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நிஷிகாண்ட் மிஷ்ரா கூறியதாவது:

வாகன பிரசாரத்தின்போது, கடவுள் சிலையை எடுத்து செல்வது நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரான செயலாகும். ரத யாத்திரை விழாவில், கடவுள் சிலை தேரிலே வீதி உலா வருவது தான் வழக்கம். இந்நிலையில் பிரசார பொதுக்கூட்டத்தில், ஜெகநாதர் சிலையை கையில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது கோவிலில் பணிபுரிபவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் எந்தவொரு செயலும் மதம், சாதி, கலாச்சாரம், பாரம்பரியத்தினை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது எனும் விதி உள்ளது. சம்பீத் பத்ராவின் இந்த செயல், தேர்தல் விதி மீறல். எனவே தேர்தல் ஆணையரிடம் அவர் மீது புகார் கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சம்பீத் பத்ரா கூறுகையில், ‘பூரி ஜெகநாதர் கடவுளின் சிலையை ஒருவர் எனக்கு பரிசாக அளித்தார். எனவே அதனை மரியாதையுடன் பெற்றுக் கொண்டேன். நான் கடவுளை அவமரியாதை செய்யவில்லை. மேலும் இதனை தேர்தலுக்காகவும் பயன்படுத்தவில்லை. இந்த செயல் குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய கவலை எனக்கில்லை’ என தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools