பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு மீண்டும் கப்பல்கள் வாங்குவது குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் இன்று (09.03.2022) பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான மூன்று கப்பல்கள் மூலம் நிலக்கரி வெளிநாடுகளிலிருந்தும் மற்றும் இந்தியாவின் மற்ற துறைமுகங்களிலிருந்தும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இயக்கப்பட்டு வந்தது. இக்கப்பல்கள் இயக்க போதுமான திறன் குறைந்துவிட்ட காரணத்தால் 2017-2018 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டுவிட்டது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு மீண்டும் புதிய கப்பல்கள் தமிழக அரசு சார்பில் வாங்குவது குறித்து இன்றைய கலந்தாய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சிவசண்முகராஜா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.