X

பூமியின் வளி மண்டலத்தில் கேட்ட மர்ம சத்தங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு

பூமியின் வளி மண்டலத்தில் உருவான மர்ம சத்தங்களை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். பூமியின் அடுக்கு மண்டலத்தின் ஒலிகளை பதிவு செய்ய ராட்சத பலூன்கள் 70 ஆயிரம் அடி உயரத்துக்கு அனுப்பப்பட்டன. ஸ்ட்ரா டோஸ்பியர் என்பது பூமியின் வளி மண்டலத்தின் 2-வது அடுக்கு ஆகும். அதன் கீழ் மட்டத்தில் ஒசோன் படலம் உள்ளது. இந்த அடுக்கு மண்டலத்தில் ஒலிகளை பதிவு செய்யப்பட பலூனில் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டன.

இந்த பலூன்கள் முதலில் எரிமலைகளை கண்காணிக்க வடிவமைக்கப்பட்டு இருந்தது. பூமியின் அடுக்கு மண்டலத்துக்கு சென்ற ராட்சத பலூன்கள் அங்கு தோன்றும் ஒலிகளை பதிவு செய்தது. அந்த ஒலிகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் மர்மமான சத்தங்கள் பதிவாகி இருப்பது தெரிய வந்தது.

இந்த மர்ம ஒலிகள் குறித்து அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த ஒலியியல் சங்கத்தின் 184-வது கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர் டேனியல் போமன் கூறும்போது, பூமியின் வளி மண்டலத்தில் அடையாளம் காண முடியாத சில விசித்திரமான ஒலிகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சில முறை மர்மமான சிக்னல்கள் ஏற்பட்டன. ஆனால் இவற்றின் ஆதாரம் முற்றிலும் தெரியவில்லை என்றார்.