X

பூமராங் – திரைப்பட விமர்சனம்

‘இவன் தந்திரன்’ வெற்றியை தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘பூமராங்’ எப்படி என்பதை பார்ப்போம்.

தீ விபத்தில் சிக்கும் அதர்வா உயிர் பிழைத்தாலும், அவரது முகம் முழுவதுமாக சிதைந்து கோரமாக மாறிவிடுகிறது. அதே சமயம், மூளைச்சாவு அடைந்த சுஹாசினியின் மகனின் உடலுருப்புகளையும், சதைகளையும் தானமாக வழங்க, அந்த சதைகளை அதர்வாவுக்கு பொருத்தும் மருத்துவர்கள் அவரை முழுவதுமாக மாற்றிவிடுகிறார்கள்.

புதிய முகத்தோடு தனது வாழ்க்கையை தொடங்கும் அதர்வாவுக்கு, ஹீரோயின் மேகா ஆகாஷ் நட்பு கிடைக்க பிறகு அதுவே காதலாக மாறிவிடுகிறது.

இதற்கிடையே, அதர்வாவை கொலை செய்ய சிலர் முயற்சிக்கிறார்கள். அதில் இருந்து தப்பிக்கும் அதர்வா தன்னை கொலை செய்ய துரத்துபவர்கள் யார் என்பதை அறிவதற்காக, சுஹாசினியை சந்திக்கும் போது, அதர்வாவுக்கு சதைகளை தானமாக கொடுத்த மூளைச்சாவு அடைந்த நபர், சுஹாசினியின் மகனே இல்லை, என்பதை தெரிந்துக் கொள்வதோடு, அவர் குறித்து சுஹாசினிக்கும் எந்த தகவலும் தெரியாது என்பதையும் அறிந்துக் கொள்கிறார்.

தனது புதிய முகத்தின் பின்னணி மற்றும் அவர் யார்? என்பதை அறிந்தால் மட்டுமே தன்னை கொலை செய்ய துரத்துபவர்கள் யார்? என்பதை அறிய முடியும் என்ற முடிவுக்கு வரும் அதர்வா, முகத்தின் பின்னணி குறித்து அறியும் முயற்சியில் ஈடுபடும் போது, அவர் முகத்தின் சொந்தக்காரர் சக்தி என்பதும், அவர் திருச்சியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வருகிறது. சக்தியின் பின்னணியை அறிய திருச்சிக்கு செல்ல, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், அதர்வா மீது நடக்கும் கொலை முயற்சிக்கான பின்னணியும் தான் ‘பூமராங்’ படத்தின் மீதிக்கதை.

சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானராக தொடங்கும் படம், முடியும் போது மிகப்பெரிய சமூக விழிப்புணர்வை ரசிகர்கள் மனதில் விதைக்கிறது.

கமர்ஷியல் படமாக இருந்தாலும், அதில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷயங்களை பிரம்மாண்டமாக சொல்லும் இயக்குநர் ஷங்கரின் படத்தை பார்த்தது போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கும் இயக்குநர் ஆர்.கண்ணன், முதல் பாதியை படு விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.

காமெடி, காதல், டூயட் என்று கமர்ஷியல் விஷயங்கள் முதல் பாதியில் இருந்தாலும், அவை அனைத்தும் திரைக்கதையின் வேகத்தை குறைக்காத வகையில் திரைக்கதையை நேர்த்தியாக அமைத்திருக்கும் இயக்குநர் கண்ணன், எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதையும், அதற்கான தீர்வையும் சொல்லியிருப்பதோடு, படம் முழுவதிலும் சமகால அரசியலையும், ஆட்சியாளர்களையும் வசனங்கள் மூலம் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

ஹீரோவாக நடித்திருக்கும் அதர்வா, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதோடு, கதாநாயகனாக அல்லாமல் கதைக்கு ஏற்ற நாயகனாகவே படம் முழுவதும் வலம் வருகிறார்.

ஹீரோயின் மேகா ஆகாஷின் கதாபாத்திரமும், அவருக்கான முக்கியத்துவமும் குறைவு தான் என்றாலும், அழகில் நிறைவாக இருக்கிறார். ஹோம்லி, மாடர்ன் என இரண்டிலும் அழகாக இருக்கும் மேகா ஆகாஷ், நடிப்பிலும் தன்னை நிரூபிக்கும் கதைகளை தேர்வு செய்தால், தமிழ் சினிமாவின் கனவு கண்ணியாவது உறுதி. மற்றொரு நாயகியான இந்துஜாவுக்கு டூயட்டும், காதல் காட்சிகளும் இல்லை என்றாலும் படத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

சதிஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி சிரிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்க வைக்கிறது. அதிலும், ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான வசனங்கள் கைதட்டல் பெறுகிறது. காமெடி நடிகராக மட்டும் அல்லாமல் கதையின் முக்கிய கதாபாத்திரமாக அவர் ரசிகர்களை கவர்கிறார்.

உபேன் பட்டேல் படத்தின் வில்லன் என்றாலும், அவர் மீது ரசிகர்கள் கவனம் திரும்பாமல், இயக்குநர் காட்டிய நிஜ வில்லன்கள் மீது கவனம் திரும்புவது தான் படத்தின் மிக்கப்பெரிய பலம். லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால், விவசாயமும் அதனை நம்பியிருக்கும் மக்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அதில் இருந்து தங்களை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும், என்பது குறித்து இயக்குநர் கண்ணன் அழுத்தமாக கூறியிருக்கிறார்.

நல்ல விஷயமாக இருந்தாலும் அதை மக்களிடம் கொண்டு செல்ல, சில மேஜிக்குகளை செய்ய வேண்டும் என்பதை ரொம்ப நன்றாகவே புரிந்துவைத்துள்ள இயக்குநர் கண்ணன், பரபரப்பான திரைக்கதையிலும் பல பஞ்ச் வசனங்கள் மூலம் அரசாங்கத்தையும், அரசு அதிகாரிகளையும் கேள்வி கேட்டிருப்பதோடு, மக்களையும் யோசிக்க வைக்கிறார்.

‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதனின் இசையும், பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளையும், அவர்களின் மக்களுக்கு எதிரான திட்டங்களையும் விமர்சிப்பது, அதிகாரிகளின் லஞ்சம் மற்றும் ஊழலை விமர்சிப்பது, போன்ற ஜானரில் பல படங்கள் வந்திருந்தாலும், அவற்றையெல்லாம் கண்ணன் கையாண்ட விதமும் அதை சொல்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட களமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

நதிநீர் இணைப்பு என்பதை வசனம் மூலம் மட்டுமே சொல்லாமல் பிரம்மாண்டமான கால்வாய் ஒன்றை வெட்டியிருப்பது படம் பார்ப்பவர்கள் கதைக்குள் ஒன்றிவிட செய்கிறது. வசனங்கள் மூலமாக மட்டுமே தான் சொல்ல நினைத்ததை சொல்லாமல், காட்சிகள் மூலமாகவும் பல இடங்களில் சொல்லியிருக்கும் இயக்குநர் கண்ணனின் இந்த ‘பூமராங்’ ஆயுதமாக இருந்தாலும், விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வாகவும் இருக்கிறது.

மொத்தத்தில், ‘பூமராங்’ நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக மட்டும் அல்லாமல், நதிநீர் இணைப்பின் முக்கியத்துவத்தை யோசிக்க வைக்கும் படமாகவும் உள்ளது.

-ஜெ.சுகுமார்