சென்னை பகுதியில் உள்ள பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர், சென்னை மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்தநிலையில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே குடிநீர் வழங்குவது தொடர்பாக கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான முதல் தவணை தண்ணீர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையில் உள்ள பூண்டி ஏரிக்கு திறந்துவிடப்பட்டு உள்ளது.
பூண்டி ஏரிக்கு 755 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் ஏரியில் 712 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக 25 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று சோழவரம் ஏரியில் 112 கன அடியும், புழல் ஏரியில் 2 ஆயிரத்து 162 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,585 கன அடி என மொத்தம் 4 ஆயிரத்து 571 கன அடி தண்ணீர் 4 ஏரிகளிலும் உள்ளன.
அதேபோல் குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து 117 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது ஏரிகளில் இருக்கும் தண்ணீர் மூலம் சென்னை மக்களின் 4 மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். வடகிழக்கு பருவ மழை வந்தால் ஏரிகளில் நீர் இருப்பு உயர வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 ஏரிகளிலும் 713 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.