’புஷ்பா’ படக்குழுவினருக்கு தங்க நாணயத்தை பரிசளித்த அல்லு அர்ஜுன்

புஷ்பா படக்குழுவின் கடின உழைப்பால் ஈர்க்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன், அதன் முக்கியமான 35-40 உறுப்பினர்களுக்கு தலா ஒரு துலாம் (11.66 கிராம்) மதிப்புள்ள தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அனைத்து தயாரிப்பு பணியாளர்களுக்கும் ரூ 10 லட்சம் ரொக்க பரிசாக வழங்கியுள்ளார்.

அல்லு அர்ஜுனின் இந்த செயல், புஷ்பா குழுவினர் மற்றும் அவரது ரசிகர்களின் பாராட்டை மட்டுமில்லாது, அனைத்து தரப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் அன்பையும் பெற்றுள்ளது.

‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 டிசம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்து, சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழகத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.

ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள புஷ்பா தி ரைஸ், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools