காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இது குறித்து இந்தியா கூறிய குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்து வந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் பொறுப்பு தூதரை இந்தியா சம்மன் கொடுத்து அழைத்தது. அப்போது அவரிடம் புலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தானில் இயங்கி வருவதையும் ஆதாரத்துடன் இந்தியா வழங்கியது.
இது குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாக இந்தியா கூறி வரும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தொடர்ந்து மறுத்து வருவது வருத்தம் அளிக்கிறது. புலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதை ஆதாரத்துடன் பாகிஸ்தானிடம் ஒப்படைத்து உள்ளோம். இனியாவது அவர்கள் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம் என தெரிவித்தனர்.