புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மேலும் 2,600 சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு!

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கடந்த 1-ந்தேதி முதல் ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் இதுவரை 2,570 சிறப்பு ரெயில்கள் மூலம் 32 லட்சம் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு 1,246 ரெயில்களும், பீகாருக்கு 804 ரெயில்களும், ஜார்கண்டுக்கு 124 ரெயில்களும் இயக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே நிர்வாகம் கூறி உள்ளது.

இதேபோல் அதிகபட்சமாக குஜராத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு 759 ரெயில்களும், மராட்டியத்தில் இருந்து 483 ரெயில்களும், பஞ்சாபில் இருந்து 291 ரெயில்களும் புறப்பட்டு சென்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் நேற்று கூறுகையில், அடுத்த 10 நாட்களில் மேலும் 2,600 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்றும், அவற்றின் மூலம் 36 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மாநிலங்கள் கேட்டுக் கொண்டால் மாநிலங்களுக்குள் ரெயில்கள் இயக்கப்படும் என்றும், இதன் மூலம் 10 முதல் 12 லட்சம் பேர் பயணம் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools