புற்றுநோய் சிகிச்சை முடித்து இந்தியா திரும்பிய நடிகர் ரிஷி கபூர்
பழம்பெரும் இந்தி நடிகர் ரிஷி கபூர். 67 வயதான இவர் இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர் தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ (என் பெயர் ஜோக்கர்) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து 1973-ம் ஆண்டு பாபி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில், கடந்த ஆண்டு அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது மனைவியும், நடிகையுமான நீத்து கபூருடன் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கிற்கு சென்றார்.
அங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரை நடிகர்கள் ஷாருக் கான், அமீர் கான், அபிஷேக் பச்சன், அனுபம் கெர் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் ஆகியோர் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ரிஷி கபூர் நேற்று காலை மும்பை திரும்பினார்.
இதுகுறித்து ரிஷி கபூர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘11 மாதம் 11 நாட்கள் கழித்து நான் வீடு திரும்பி உள்ளேன. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.