புறநகர் ஏசி மின்சார ரெயில்களின் கட்டணம் குறைக்கப்படாது – தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது. சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வழக்கமான மின்சார ரெயில் கட்டணத்தை விட ஏ.சி. மின்சார ரெயிலில் கட்டணம் பல மடங்கு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்ச கட்டணம் ரூ.35-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.105 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரெயில் பயணிகள் உடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் அதிகம் என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்த தெற்கு ரெயில்வே நிர்வாகம், சென்னை புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளது. கட்டண நிர்ணயம் என்பது தெற்கு ரெயில்வே முடிவு செய்ய முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், புறநகர் ஏ.சி. ரெயில் இயக்கப்பட வேண்டிய நேரம் குறித்து பயணிகள் வாட்ஸ் அப் மூலம் கருத்து தெரிவிக்கலாம். பயணிகள் தங்கள் கருத்துகளை 63747 13251 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும் அறிவுறுத்தி உள்ளது.
பீக் அவர்ஸ் நேரங்களில் கூடுதல் ரெயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.