7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 48-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பால்டனை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த மோதலில் தமிழ் தலைவாஸ் தொடக்கத்தில் 5-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு படிப்படியாக புனே வீரர்களின் கை ஓங்கியது. தமிழ் தலைவாசை ஆல்-அவுட் ஆக்கிய புனே அணி 11-6 என்ற கணக்கில் முன்னிலை கண்டது. இதன் பிறகு இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். முதல் பாதியில் புனே அணி 15-13 என்ற புள்ளி கணக்கில் முன்னணி கண்டது.
பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்ட தமிழ் தலைவாஸ் அணி, எதிரணியை ஆல்-அவுட் செய்து பதிலடி கொடுத்ததுடன் 18-16 என்று முன்னிலை பெற்றது. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடியதால் நீயா-நானா? என்று பரபரப்புடன் ஆட்டம் நகர்ந்தது. 22-22, 24-24 என்று வீதம் சமநிலையையும் காண முடிந்தது.
இறுதி கட்டத்தில் புனே அணி 29-25 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற, உள்ளூர் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். ஆட்டம் முடிய 2 நிமிடம் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் தலைவாஸ் வீரர் அஜித்குமார் கைகொடுத்தார். எதிரணி எல்லைக்குள் ஊடுருவி 3 பேரை அவுட் செய்ததுடன், போனஸ் புள்ளியையும் சேர்த்து மொத்தம் 4 புள்ளிகளை அள்ளினார். இதனால் ஆட்டம் 29-29 என்று மீண்டும் சமன் ஆனது. அதன் பிறகு தலைவாஸ் மேலும் ஒரு புள்ளி எடுத்து வெற்றியை நெருங்கியது.
இந்த சூழலில் வாழ்வா- சாவா? ரைடுக்கு சென்ற தலைவாஸ் வீரர் ராகுல் சவுதிரி எதிரணி வீரர்களிடம் சிக்கியதுடன் 2 புள்ளியையும் தாரைவார்த்தார். இதனால் தலைவாஸ் 30-31 என்று பின்தங்கியது. இதைத் தொடர்ந்து கடைசி ரைடுக்கு சென்ற புனே வீரர் மஞ்ஜீத்தை தலைவாஸ் அணியினர் மடக்கி பிடிக்க திரிலிங்கான இந்த ஆட்டம் 31-31 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது. தலைவாஸ் கேப்டனும், ரைடு கில்லாடியுமான அஜய் தாகூர் (1 புள்ளி) அடிக்கடி புனே வீரர்களிடம் மாட்டிக்கொண்டது பின்னடைவாக அமைந்தது. தலைவாஸ் தரப்பில் ராகுல் சவுத்ரி, அஜித்குமார் தலா 8 புள்ளிகள் சேர்த்தனர்.
இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றி, 3 தோல்வி, 2 டை என்று 23 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடம் வகிக்கிறது. புனேரி பால்டன் அணி 2 வெற்றி, 5 தோல்வி, ஒரு டை என்று 14 புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 40-29 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது.
இதே மைதானத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் மும்பை-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி), உ.பி.யோத்தா-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8.30 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.