புரோ கபடி லீக் – டெல்லிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் தோல்வி
12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் தொடரில் ஐதராபாத்தில் நேற்றிரவு அரங்கேறிய 9-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியின் 11-வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி, டெல்லி அணியை ‘ஆல்-அவுட்’ செய்து அசத்தியது. முதல் பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 18-11 என்ற புள்ளி கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. பிற்பாதி ஆட்டத்தில் டெல்லி அணி சரிவில் இருந்து மீண்டு வந்ததுடன் தமிழ் தலைவாஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்து பதிலடி கொடுத்தது. கடைசி 5 நிமிடங்களில் மளமளவென புள்ளிகளை திரட்டிய டெல்லி அணி 29-29 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு எகிறியது.
ஆட்டத்தின் கடைசி ரைடுக்கு டெல்லி வீரர் நவீன்குமார் சென்றார். அப்போது இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. அத்துடன் அந்த ரைடு வாழ்வா? சாவா? ரைடாகும். இதில் புள்ளி எடுக்கவில்லையென்றால் டெல்லி அணியின் ரைடர் அவுட் ஆகி விடுவார்.
ஆனால் அந்த கடைசி ரைடு டெல்லி அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. நவீன்குமார் மிரட்டலாக எதிரணி எல்லைக்குள் ஊடுருவி அவுட் செய்ய முயற்சித்தார். அப்போது மொகித் சில்லர் (தமிழ் தலைவாஸ்) நவீன்குமாரை மடக்கினார். இதனால் தமிழ் தலைவாஸ் அணியினர் வெற்றி பெற்றதாக நினைத்து மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் தமிழ் தலைவாஸ் அணியின் கார்னர் வீரர் மஞ்சித் சில்லர் பின்புற எல்லை கோட்டை தாண்டி விட்டார். இதனால் நடுவர் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கினார்.
இதில் அதிருப்தி அடைந்த தமிழ் தலைவாஸ் வீரர்கள் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்தனர். அது தான் தமிழ் தலைவாஸ் அணிக்கு பாதகமாக மாறியது. 3-வது நடுவர் டெல்லி அணிக்கு ஒரு புள்ளி வழங்கியதுடன், ரைடர் அவுட் இல்லை என்று அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
இதனால் டெல்லி அணி 30-29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது முதலாவது தோல்வியாகும். நடுவரின் சர்ச்சை முடிவால் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினார்கள்.
இதே மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் உ.பி.யோத்தா-குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் (இரவு 7.30 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.