புரோ கபடி லீக் – ஜெய்ப்பூர் அணியிடம் தோற்றது தமிழ் தலைவாஸ்
12 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ கபடி லீக் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 52-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை எதிர்கொண்டது. அஜய் தாகூரின் ரைடில் எதிராளியை அவுட் செய்ததுடன் தமிழ் தலைவாஸ் அணி உற்சாகமாக புள்ளி கணக்கை தொடங்கியது. அதன் பிறகு ஜெய்ப்பூர் அணியினரின் கை சற்று ஓங்கியது. இரு அணியினரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்த வண்ணம் இருந்தனர். ஒரு கட்டத்தில் 6-6 என்று சமநிலை வந்தது.
அதன் பிறகு தமிழ் தலைவாஸ் வீரர் ராகுல் சவுத்ரி இரண்டு முறை சூப்பர் டேக்கிளில் சிக்கியதால் ஜெய்ப்பூருக்கு 4 புள்ளிகளை தாரை வார்க்க வேண்டியதாகி விட்டது. இதனால் முதல் பாதியில் 13-11 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் முன்னிலை பெற்றது.
அதே போன்றே பிற்பகுதி ஆட்டத்திலும் அனல் பறந்தது. ஆல்-அவுட் செய்யும் வாய்ப்பை நழுவ விட்ட தமிழ் தலைவாஸ் அணியில் கேப்டன் அஜய் தாகூர் சூப்பர் டேக்கிளில் சிக்கி 2 புள்ளியை பறிகொடுத்து, பின்னடைவுக்கு வித்திட்டார். ஆனாலும் தொடர்ந்து போராடிய தமிழ் தலைவாஸ் வீரர்கள் இறுதி கட்டத்தில் 22-23 என்று மிகவும் நெருங்கினர். இதன் பின்னர் ஜெய்ப்பூர் அணியினர் சாதுர்யமாக செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்துக் கொண்டனர்.
முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 28-26 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது. தலைவாசின் தற்காப்பு பலவீனத்தை பயன்படுத்தி ஜெய்ப்பூர் அணி 11 போனஸ் புள்ளிகளை குவித்தது. இது தான் ஜெய்ப்பூருக்கு சாதகமாக மாறியது.
தமிழ் தலைவாஸ் அணி 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 4 தோல்வி, 2 டை என்று 24 புள்ளிகளுடன், பட்டியலில் 6-வது இடம் வகிக்கிறது. இந்த சீசனில் உள்ளூரில் தமிழ் தலைவாஸ் அணி இன்னும் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 31-23 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. இதே மைதானத்தில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.