12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி அகமதா பாத்தில் தொங்கியது. அதை தொடர்ந்து பெங்களூர், புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், பாட்னா, டெல்லி, கொல்கத்தா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்று தற்போது 12-வது மற்றும் இறுதிக்கட்ட லீக் ஆட்டங்கள் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றுடன் 129 ஆட்டங்கள் முடிந்தன. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், தபாங் டெல்லி, குஜராத் ஜெய்ன்ட்ஸ், பாட்னா பைரேட்ஸ், அரியானா ஸ்ட்லர்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன. பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூர் புல்ஸ், உ.பி. யோதாஸ், யு மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டன. புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் நாளையுடன் முடிவடைகிறது.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை அணி 6 வெற்றி, 13 தோல்வி, 2 டையுடன் 42 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ் 2 வெற்றி, 19 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை முடிக்கும் ஆர்வத்தில் உள்ளன.
நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் புனே-உ.பி. (இரவு 8 மணி), அரியானா-பெங்களூரு (இரவு 9 மணி), அணிகள் மோதுகின்றன. புனே அணி உ.பி.யை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வேட்கையில் உள்ளது. உ.பி. அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அரியானா அணி பெங்களூரை வீழ்த்தி 4-வது இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. பெங்களூர் அணி 8-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஐதராபாத்தில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. அன்று எலி மினேட்டர் ஆட்டங்களும், 28-ந் தேதி அரை இறுதி ஆட்டங்களும், மார்ச் 1-ந் தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது. ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும். மற்ற 4 அணிகளான டெல்லி, குஜராத், அரியானா, பாட்னா ஆகியவை எலி மினேட்டரில் ஆடுகின்றன.