X

புரோ கபடி லீக் – அரையிறுதியில் டெல்லி, பெங்களூரு மோதல்

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியின் ‘பிளேஆப்’ சுற்று ஆட்டங்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது.

‘எலிமினேட்டர் 1’ ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் 48-45 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாவையும், மும்பை அணி 46-38 என்ற கணக்கில் அரியானா ஸ்டீலர்சையும் தோற்கடித்தன. இந்த வெற்றி மூலம், பெங்களூர், மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. தோல்வியால் உ.பி.யோதா, அரியானா அணிகள் வெளியேற்றப்பட்டன.

நேற்றைய ஆட்டங்களில் பவன்குமார் (பெங்களூர்) 20 புள்ளியும், அபிஷேக் (மும்பை) 16 புள்ளியும், அர்ஜூன் தேஷ்வால் (மும்பை) 15 புள்ளியும், விகாஸ் கண்டோலா (அரியானா) 13 புள்ளியும், ரிஷாங்க் தேவதிகா (உ.பி.) 11 புள்ளியும், ஸ்ரீகாந்த் ஜாதவ் (உ.பி.), பிரசாந்த்குமார் ராய் (அரியானா) தலா 9 புள்ளியும் எடுத்தனர்.

இன்று ஓய்வு நாளாகும். அரை இறுதி ஆட்டங்கள் நாளை (16-ந்தேதி) நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் அரைஇறுதியில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அரைஇறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது. ஜோகீந்தர் நர்வால் தலைமையிலான அந்த அணி 15 ஆட்டத்தில் வெற்றி பெற்று 4 ஆட்டத்தில் தோற்றது. 3 போட்டி ‘டை’ ஆனது. மொத்தம் 85 புள்ளிகள் பெற்றது.

டெல்லி அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

இந்தப்போட்டி தொடரில் இரு அணிகளும் மோதிய 2 ஆட்டத்தில் டெல்லி ஒரு முறை வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டம் 39-39 என்ற கணக்கில் ‘டை’ ஆனது. டெல்லியில் நடந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி 33-31 என்ற கணக்கில் வென்றது.

டெல்லி அணியில் நவீன்குமார் (270 புள்ளிகள்), சந்திரன் ரஞ்சித் (114 புள்ளி), விஜய் (56 புள்ளி), ரவீந்தர் பஹல் (59 புள்ளி), கேப்டன் ஜோகீந்தர் நர்வால், விஷால் மானே போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

நடப்பு சாம்பியனான பெங்களூர் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது.

அந்த அணியில் நட்சத்திர வீரராக பவன்குமார் ஷெரவாத் உள்ளார். அவர் 321 ரெய்டு புள்ளிகள் உள்பட மொத்தம் 335 பாயிண்டுகள் பெற்றுள்ளார். இதுதவிர ரோகித்குமார் (89 புள்ளி), சுமித்சிங் (59 புள்ளி), மகேந்தர்சிங் (59 புள்ளி) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் மனீந்தர்சிங் தலைமையிலான பெங்கால் வாரியர்ஸ்- பசல் தலைமையிலான மும்பை அணிகள் மோதுகின்றன.

பெங்கால் வாரியர்ஸ் 14 வெற்றி, 5 தோல்வி, 3 டையுடன் 83 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. நேரடியாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. அந்த அணி மும்பையை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

இந்தப்போட்டி தொடரில் பெங்கால் வாரியர்ஸ் 2 முறையும், மும்பையை வீழ்த்தி இருந்தது. பாட்னாவில் நடந்த ஆட்டத்தில் 32-30 என்ற கணக்கிலும், கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் 29-26 என்ற கணக்கிலும் வென்று இருந்தது

பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டன் மனீந்தர்சிங் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் 205 ரைடு புள்ளிகள் பெற்றுள்ளார். முகமது இஸ்மாயில் நபிபக்ஷ் (107 புள்ளி), தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் (101 புள்ளி), பல்தேவ்சிங் (62 புள்ளி) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளன.

2015-ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி பெங்கால் வார்யர்சுக்கு பதிலடி கொடுத்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வேட்கையில் இருக்கிறது.

மும்பை அணியில் அபிஷேக்சிங் (152 புள்ளி), கேப்டன் பசல் (83 புள்ளி), சந்தீப் நர்வால் (71 புள்ளி) அர்ஜூன் தேஷ்வால் அதுல், சுரேந்தர்சிங் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இறுதிப்போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும்.

Tags: sports news