புயல் நிவாரண நிதியை மம்தா பானர்ஜி சுரண்டி விட்டார் – அமித்ஷா குற்றச்சாட்டு
புயல் நிவாரணத்துக்காக மத்திய அரசு அளித்த ரூ.10 ஆயிரம் கோடி நிதியை மம்தா பானர்ஜி சுரண்டி விட்டார் என்று அமித்ஷா குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி, நேற்று கொசபா என்ற இடத்தில் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
மேற்கு வங்காளத்தில் கடந்த ஆண்டு அம்பான் புயல் தாக்கியது. புயல் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி அளித்தது. ஆனால், அதில் ஒரு பைசா கூட உங்களுக்கு (மக்கள்) கிடைக்கவில்லை.
அந்த பணம் எங்கே போனது? எல்லாவற்றையும் மம்தா பானர்ஜியும், அவருடைய சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜியும் சுரண்டி விட்டனர்.
பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, புயல் நிவாரண நிதியை மோசடி செய்வதவர்களை ஜெயிலுக்கு அனுப்புவோம்.
மத்திய அரசு திட்டங்கள் எதையும் மம்தா அமல்படுத்துவது இல்லை. அவருக்கு பொதுமக்கள் நலனில் அக்கறை இல்லை. தன் மருமகன் நலனுக்காகவே உழைக்கிறார்.
நோபல் பரிசு பாணியில் தாகூர் பரிசும், ஆஸ்கர் விருது பாணியில் சத்யஜித்ரே விருதும் உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.