புயலால் பாதிக்கப்பட்டவர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! – அதிமுக அறிவிப்பு

அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துவ சமுதாயப் பேராயர்கள், ஆயர்கள், அருட்பணியாளர்கள் மற்றும் விசுவாசிகளுடன் கிறிஸ்துமஸ் விழாவினைக் கொண்டாடும் மரபை தொடங்கி வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

கிறிஸ்துவ சமூகத்தினரின் சமூகத் தொண்டுகளையும், கல்வி, மருத்துவ அறப்பணிகளையும் பாராட்டிப் போற்றும் வண்ணம் அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவினை அனைவருடனும் கொண்டாடி மகிழ்ந்த ஜெயலலிதா, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற அண்ணாவின் உள்ளத்து உணர்வுகளை மனதில் கொண்டு சிறுபான்மைச் சமூக மக்கள் பாதிப்படைந்த தருணங்களில் கிறிஸ்துமஸ் கால சகோதரப் பகிர்தல்களை விழாவாக அல்லாமல், எளியோருக்கு உதவும் நிகழ்வாகவும் நடத்திக்காட்டினார்.

ஜெயலலிதா காட்டிய வழியில் நாளும் நடைபோடும் அ.தி.மு.க. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவினை ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட கிறிஸ்துவ சமுதாய மக்களோடு கிறிஸ்துமஸ் சகோதரத்துவப் பகிர்தலை மேற்கொள்ளும் வகையில், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், கிறிஸ்துவ சமுதாய மக்கள் வாழும் இடங்களைத் தெரிவு செய்து, அம்மக்களுக்கு கிறிஸ்துமஸ் விழாக்கால சகோதரப் பகிர்தலை செய்வதற்கு அ.தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை கிறிஸ்துவ சமுதாய மக்களுக்கு ஜெயலலிதாவே நேரில் வந்து ஆறுதல் கூறுவது போல, அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் தனி வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட உள்ளது.

கிறிஸ்துவ சமுதாய மக்களுக்கு வழங்கும் கிறிஸ்துமஸ் கால அன்புக் கொடைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை, தலைமைக் கழகத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) மாலை 5 மணியளவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், சிறுபான்மையினர் நலப் பிரிவில் பல்வேறு நிலையில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools