X

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புகளால் பல நடிகர்களால் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.

இதனால், நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்பட தமிழ் நடிகர்கள் பலரும் புனித் ராஜ்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர், அந்தவகையில், நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அவருடன், அமைச்சர் அன்பில் பொய்யாமொழியும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, புனித் ராஜ்குமார் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. பெரியவர் அய்யா ராஜ்குமார் எனது தாத்தாவுடன் நட்பு பாராட்டியவர். நெருக்கமாக இருந்தவர். எனது குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். இந்த நேரத்தில் அவர்களின் குடும்பத்தைச் சந்தித்து தலைவர் சார்பாகவும் கழகத்தின் சார்பாகவும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.