புனித் ராஜ்குமார் இறப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறங்கல்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 46. நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். அதில், ‘மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களின் மகனும் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் திகைப்பும் ஏற்பட்டது. இவரது மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு.
திரை நட்சத்திரமாக இருந்தபோதிலும் ஒரு தாழ்மையான மனிதராகவே இருந்தார். தலைவர் கலைஞரின் மறைவுக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறுவதற்காக எங்கள் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற புனித் அவர்களின் அன்பான செயல் இன்னும் என் இதயத்தில் உள்ளது.
கன்னட திரையுலகம் மிகச்சிறந்த மனிதரை இழந்துவிட்டது. இந்த ஈடு செய்ய முடியாத இழப்பால் துயருற்றிருக்கும் புனித் குடும்பத்தினருக்கும், கர்நாடக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.