புது படத்திற்காக உடல் எடையை கூட்டும் அரவிந்த்சாமி
செக்கச் சிவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் கள்ளபார்ட் படத்திலும் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.
அடுத்ததாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பாக மதியழகன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து மதியழகன் கூறும்போது, ‘இது ஒரு முழுமையான ஆக்சன் திரைப்படம். அரவிந்த்சாமி இரண்டு லுக்கில் வருவதால் தனது உடல் எடையை கணிசமாக கூட்டியிருக்கிறார். படத்தின் முதல் பார்வை மார்ச் முதல் வாரத்திலும், படப்பிடிப்பு மார்ச் இறுதியிலும் தொடங்க இருக்கிறது.
எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 12வது படைப்பாக இப்படம் தயாராகிறது. நயன்தாராவின் கொலையுதிர் காலம், ஹன்சிகா நடிக்கும் மஹா, மற்றும் நடிகர் அருண் விஜய்யின் பாக்சர் ஆகிய திரைப்படங்கள் எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் உருவாகி வருகிறது’ என்றார்.