X

புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கவர்னர் மீது புது புகார்!

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தடை உள்ளது. அதிகாரிகள் திறமையானவர்களாக இருந்தாலும் சிலர் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். அதிகாரிகளை மிரட்டியும், வசைபாடியும் வளர்ச்சியை தடுக்கின்றனர். அவர்களது நடவடிக்கை என்ன என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதன்விளைவு தான் தொடர்ந்து நடந்த தேர்தல்களில் வந்த முடிவுகள். யார் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களித்தனர்.

புதுவையில் அரிசிக்கு பதிலாக பணம்தான் வழங்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவினை எதிர்த்து நீதிமன்றம் செல்ல தயாராக உள்ளோம். ஏனெனில் இலவச அரிசி திட்டத்திற்கான விதியில் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கலாம் என்று கூறப்படவில்லை.

ஐகோர்ட்டு தீர்ப்பினை புறந்தள்ளி, அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடுவது, போட்டி நிர்வாகத்தை நடத்த முயற்சிப்பது போன்றவை தொடங்கியுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் உள்ள கவர்னர்கள் இதுபோல் செய்ததில்லை. சிறிய மாநிலமான புதுச்சேரியில் எதிர்க்கட்சியினரை தூண்டிவிட்டு அவர்கள் மூலம் மனுக்களை பெறும் கவர்னர் கிரண்பெடி தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். பாரதிய ஜனதா, மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் மனு மூலம் இது தெரியவருகிறது.

கவர்னர் மாளிகை பாரதிய ஜனதாவின் தலைமை அலுவலகமாக மாறிவிட்டது. இதுதொடர்பாக நான் புதுவை வந்த ஜனாதிபதியிடம் தெளிவாக கூறியுள்ளேன். கவர்னரை திரும்பப்பெற கடிதமும் கொடுத்துள்ளேன். புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் மத்திய அரசும் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Tags: south news