புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பு – கவர்னர் கிரண்பேடி தகவல்

புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் புதுவை மாநிலத்தை இருப்பிடமாக கொண்டவர்களுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில் தேர்வு பட்டியலில் புதுவை மாநில மாணவர்களுக்கான இடத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த 31 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

புதுவை மாநிலத்தை இருப்பிடமாக கொண்டு நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலில் அவர்களது பெயர்கள் இடம்பெறவில்லை. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை செயலாளர் அருண் ஆகியோருக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றுள்ளன.

இதற்கிடையே அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரான அன்பழகன் எம்.எல்.ஏ. கவர்னர் கிரண்பேடியை சந்தித்து புகார் அளித்துள்ளார். இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போலி என கூறப்படும் ஆவணங்களின் சரிபார்ப்பு நிலுவையில் உள்ளதால் அத்தகையவர்களின் சேர்க்கையை இறுதி செய்யவேண்டாம் என்று ஜிப்மர் இயக்குனரை கேட்டுக்கொண்டுள்ளதாக கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools