புதுவை காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன், முன்னாள் அமைச்சர் கண்ணனின் கட்சியான மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் வெற்றிச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீணா உள்ளிட்ட 9 பேர் போட்டியிட்டனர்.
இதில், காங்கிரசுக்கு தி.மு.க.வும், என்.ஆர்.காங்கிரசுக்கு அ.தி.மு.க.வும் ஆதரவு அளித்தன.
இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 21-ந் தேதி நடந்தது. தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை – 35 ஆயிரத்து 9. இதில், 24 ஆயிரத்து 310 வாக்குகள் பதிவாகி இருந்தன. பதிவான வாக்கு சதவீதம் 69.44 ஆகும்.
வாக்கு எண்ணிக்கை இன்று லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
தொகுதியில் 3 தபால் வாக்குகள் இருந்தது. இந்த வாக்குகள் பதிவாகவில்லை. எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் 11 டேபிள்கள் அமைக்கப்பட்டு 3 சுற்றாக எண்ணப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலையில் இருந்தார்.
முதல் சுற்றில் 11 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் உள்ள 6 ஆயிரத்து 655 வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 4 ஆயிரத்து 29 வாக்குகளும், புவனேஸ்வரன் 2 ஆயிரத்து 92 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை விட 1937 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார்.
2-வது சுற்றில் 22 வாக்குச்சாவடிகளில் பதிவான 15 ஆயிரத்து 134 வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 8 ஆயிரத்து 866 வாக்குகளும், புவனேஸ்வரன் 5 ஆயிரத்து 84 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை விட 3 ஆயிரத்து 782 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார்.
3-வது சுற்றில் 10 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.
3 சுற்று வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 14 ஆயிரத்து 782 வாக்குகளை பெற்றிருந்தார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் 7 ஆயிரத்து 612 வாக்குகள் பெற்றிருந்தார்.
புவனேஸ்வரனை விட காங்கிரஸ் வேட்பாளர் 7 ஆயிரத்து 171 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
போட்டியிட்ட 9 வேட்பாளர்களில் மற்ற 7 பேரும் டெபாசிட் இழந்தனர்.
வாக்குகள் விவரம்:
மொத்த வாக்காளர்கள் – 35,009
பதிவானவை – 24,310
ஜான்குமார் (காங்.) வெற்றி – 14,782
புவனேஸ்வரன் (என்.ஆர்.காங்.) – 7,612
பிரவீணா (நாம் தமிழர் கட்சி) - 620
வெற்றிச்செல்வன் (ம.மு.கா.) – 343
லெனின் துரை (சோசலிஸ்டு கம்யூ.) – 294
கோவிந்தராஜ் (அகில இந்திய மக்கள் கழகம்) – 121
பார்த்தசாரதி (மக்கள் விடுதலை கட்சி) – 61
சகாயராஜ் (சுயே) – 37
சுகுமாறன் (சுயே) – 14
நோட்டா – 426