புதுவையில் மீண்டும் பள்ளிகள் தொடங்கியது

புதுவையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அடுத்தடுத்து மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்து வந்தன. 2020-21 கல்வியாண்டு தொடங்கிய நிலையில் தற்போது மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மத்திய அரசு அளித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி புதுவை மாநிலத்தில் முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று புதுவை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இரு குழுக்களாக பிரித்து வாரத்தில் 3 நாட்கள் மட்டும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவது, பள்ளிகளுக்கு மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். வருகைப்பதிவேடு முறை பின்பற்றப்பட மாட்டாது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளான நேற்று 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். அங்கு அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து பெற்றோரின் ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டன.

அதன்பின் உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மூலம் பரிசோதித்து விட்டு கிருமிநாசினி வழங்கி அதன்பிறகே வகுப்பறைக்குள் செல்ல மாணவர்களை ஆசிரியர்கள் அனுமதித்தனர். வகுப்பறையில் ஒரு பெஞ்சில் 2 பேர் அமரவைக்கப்பட்டனர். ஒரு பெஞ்சுக்கும் அடுத்த பெஞ்சுக்கும் இடையே போதுமான இடைவெளியும் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நகரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகை என்பது 60 முதல் 80 சதவீதம் வரை இருந்தது. கிராமப்புற பள்ளிகளில் இது 40 முதல் 60 சதவீதமாக இருந்தது. குறிப்பாக தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் வந்து இருந்தனர். இது அவர்களது ஆர்வத்தை காட்டியது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools