X

புதுவையில் எம்.பி தொகுதியில் அதிமுக தனித்து போட்டி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலிருந்து இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தான் புதுவையில் பின்பற்றப்படும். புதுவையில் மாநில கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமிதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக உள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க தொகுதி பங்கீடு செய்து போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க போட்டியிட்ட 5 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனால் அ.தி.மு.க சட்டசபையில் இடம்பெறவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

ஆட்சியில் அ.தி.மு.க இடம் பெறாவிட்டாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்ததால் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக புதுவை அ.தி.மு.க. செயல்பட்டு வந்தது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழகத்தில் அ.தி.மு.க விலகியிருப்பதால் புதுவையிலும் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகியது. ஆனால் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி தொடர்கிறது.

என்.ஆர்.காங்கிரசுக்கு 10 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதுதவிர பா.ஜனதாவை ஆதரிக்கும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும், 3 பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு ஆதரவாக உள்ளனர். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இணைந்துள்ளதால்தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி புதுவையில் நடக்கிறது. இதனால் இந்த 2 கட்சிகளும் பிரிவதற்கு வாய்ப்பில்லை.

புதுவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறுவதால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதேநேரத்தில் எதிர்கட்சிகளாக தி.மு.க, காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தி.மு.க, கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியும் நேரடியாக மோதும் சூழ்நிலை இருந்து வந்தது.

தற்போது அ.தி.மு.க தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறி இருப்பதால் புதுவை பாராளுமன்ற தொகுதியில் மும்முனைப்போட்டி உருவாகியுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் கூட்டணி கட்சிகளோடு புதுவையிலும் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து தனியாக தேர்தலை சந்திக்க உள்ளது.

Tags: tamil news