Tamilசெய்திகள்

புதுவையில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 2020 மார்ச் மாதம் 22-ந்தேதி முதல் புதுவையில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது.

கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. ½ நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கி வந்தது.

கடந்த மாதம் 8-ந்தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தொடர் மழையின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருந்தார். மாணவர்களுக்கு வருகை பதிவேடு கட்டாயம் இல்லை எனவும், ஆன்லைனில் தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் வருகைக்காக பள்ளிகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்களும், ஆசிரியர்களும் ஈடுபட்டனர்.

வகுப்பறைகள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கவும், கிருமி நாசினி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது.

மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் வரவேற்று வகுப்பறைக்கு அழைத்து சென்றனர். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் ½ நாள் மட்டுமே செயல்படும்.

ஏற்கனவே 9 முதல் 12-ம் வகுப்புகள் இதுவரை ½ நாள் மட்டுமே செயல்பட்டு வந்தது. இன்று முதல் முழு நேரமும் செயல்பட தொடங்கியது. மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

புதுவை அரசு உத்தரவை தொடர்ந்து பெரும்பாலான ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.