Tamilசெய்திகள்

புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் போரட்டம் வாபஸ் பெறப்பட்டது

புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் பழுது நீக்குதல், கட்டணம் வசூல், மின்அளவீடு செய்தல் போன்ற அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், தடைகளை ஏற்படுத்தியும் பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால் மின்வெட்டு ஏற்படுமானால் மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

இதற்கிடையே, தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து நள்ளிரவில் விடுவித்தனர். இந்நிலையில், மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, மின்துறை ஊழியர்கள் முதல் மந்திரி ரங்கசாமியை சந்திக்க சட்டபேரவைக்கு வந்தனர். இதனால் அமைச்சரவை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

மின்துறை ஊழியர்களுடன் முதல் மந்திரி ரங்கசாமி மற்றும் மின்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல் மந்திரி ரங்கசாமி உறுதியளித்ததைத் தொடர்ந்து கடந்த 6 நாளாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.