Tamilசெய்திகள்

புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு மாலை சிறுதானிய உணவு வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் 21 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து புதுச்சேரி அரசு கல்வியியல் கல்லூரியின் பெயர் பலகையும் திறந்துவைக்கப்பட்டது.

விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

புதுவையில் கல்வித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாக வைத்து, நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசு கவனம் செலுத்தும். புதுவை அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தில் முன்பு ரொட்டி மற்றும் பால் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது பால் மட்டும் வழங்கப்படுகிறது. மீண்டும் காலை உணவு திட்டத்தில் பாலோடு சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கெட் மற்றும் பழம் வழங்கப்படும். புதிய திட்டமாக மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு சிறுதானிய உணவும் வழங்கப்படும். அதாவது சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 85 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள். படிக்கும் மாணவர்களுக்கு அது புத்துணர்வு அளிப்பதாக இருக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பு மாணவர்களின் சோர்வை போக்கவே சிறுதானிய உணவு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.