X

புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்க கூடாது? – நீதிபதிகள் கேள்வி

புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், வாக்காளர்களின் மொபைல் எண்களை ஆதார் மூலம் சட்டவிரோதமாக பெற்று பாஜகவினர் பிரசாரம் செய்வதாகவும், இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு ஒத்தி வைத்தனர்.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், எஸ்எம்எஸ் மூலம் பிரசாரம் மேற்கொள்ள பாஜக முன் அனுமதி பெறவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சைபர் கிரைம் போலீஸ் விசாரணை அறிக்கையை பொருத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிய விசாரணை இன்றி பாஜகவை நேரடியாக தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. நீதிமன்றம் வேண்டுமானால் விசாரணையை கண்காணிக்கலாம் என்றும் தெரிவித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், பாஜக மீதான எஸ்எம்எஸ் பிரசாரம் குறித்த புகாரை விசாரித்து முடிக்கும்வரை புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.

மேலும் புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது? என்பது பற்றி ஆதார் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.