Tamilசெய்திகள்

புதுச்சேரி அரசு சிறப்பாக செயல்படுகிறது – கவர்னர் தமிழிசை பேச்சு

புதுவையில் சமையல் கியாஸ் மானியம், பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகை, முதல் அமைச்சரின் விபத்து உதவி காப்பீடு திட்டம், ஏழை குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி என 4 புதிய திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபா நாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:

பெண் குழந்தைகளுக்கான நிதி உதவித் திட்டம் பெருமை சேர்க்கும் திட்டமாகும். குடும்பத் தலைவிகளுக்கான நிதி உதவித் திட்டம் அறிவித்த பிற மாநிலங்கள் அதனை செயல்படுத்த முடியாத நிலையில் புதுவையில் அந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அதுபோலத்தான் சமையல் கியாஸ் மானிய திட்டத்தை யும் அறிவித்த பிற மாநிலங்கள் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. ஆனால், புதுவையில் செயல் படுத்தப்பட்டுவிட்டது.

புதுவை முதலமைச்சர், அமைச்சர்கள் எந்த புகழையும் எதிர்பாராமல் மக்களுக்கான சேவையை ஆற்றிவருவது பாராட்டுக்குரியது. மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

ஆகவே, புதுவையை சிறந்த மாநிலமாக மட்டுமல்லாது, அரசுத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தும் மாநிலமாகவும் மாற்றி வருகிறோம். ஆனால், சிலர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது சரியல்ல. மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியாக ரூ.1400 கோடியும், ஜி.எஸ்.டி. வருவாயில் ரூ.3 ஆயிரம் கோடியும் கிடைத்திருப்பது நிர்வாகம் சிறப்பாக நடந்து வருவதையே காட்டுகிறது.

பெண் குழந்தை பிறக்கிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி புதுச்சேரியில் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் இறைவனை வேண்டிக் கொள்ளும் சூழ்நிலை புதுச்சேரியில் உருவாகி இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு உதவி செய்தோம் என்றால் அது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சென்று சேரும். அந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ரங்கசாமி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

அந்த காலத்தில் பெண் குழந்தைகளை பாரமாக நினைத்தனர். ஆனால் புதுவையில் தற்போது பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது. அவர்களின் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேல் பெண் குழந்தை என்றால் தலை நிமிர்ந்து நடக்கலாம். பெண்களுக்கான திட்டங்கள் என்றால் நான் நிச்சயம் உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.