Tamilசெய்திகள்

புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி ரத்து

நாடு முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.

மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டது. 2 மாதங்கள் இதே நிலை நீடித்தது. மே மாத இறுதியில் புதுவையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.

ஆனால், அண்டை மாநிலமான தமிழகம், பிற மாநிலங்களில் இருந்து மது பிரியர்கள் புதுவைக்கு வருவதை தடுக்கும் வகையில் புதிதாக கொரோனா வரி விதிக்கப்பட்டது.

இதனால் புதுவையிலும் தமிழகத்துக்கு இணையாக மது விற்பனை செய்யப்பட்டது. புதுவையில் மட்டும் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் இந்த வரிக்கான காலம் முடிவடைந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் உடனடியாக வரியை ரத்து செய்யவில்லை.

அதற்கு பதிலாக மறு உத்தரவு வரும்வரை கொரோனா வரி நீடிக்கும் என கலால்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து கலால்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி கூடுதலாக மதுபானங்களுக்கு வசூலிக்கப்பட்ட கொரோனா வரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் எம்.ஆர்.பி. விலையில் மதுபானங்களை விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் புதுவையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வழக்கமாக கலால்துறை மூலம் அதிகளவில் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

ஆனால், கொரோனா வரி விதிப்பால் மதுபானங்களின் விற்பனை சரிந்தது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தாலும் வெளிமாநிலத்தில் இருந்து வரும் மதுபான பிரியர்களின் வருகை குறைந்தது. இதற்கு மதுபான விலை உயர்வும் காரணமாக இருந்தது.

புதுவையில் சில மது பானங்கள், பீர் வகைகளின் விலை இருமடங்காக இருந்தது. இந்நிலையில் தற்போது பழைய விலைக்கு மதுபானங்களின் விற்பனை தொடங்கியுள்ளது. இது மது பிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.