புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு – மக்கள் மகிழ்ச்சி

கடந்த சில மாதங்களாக பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது.

புதுவையில் நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.107.79-க்கும், டீசல் ரூ.102.66-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் குறைத்து அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து தீபாவளி பரிசாக புதுவை அரசின் சார்பில் தனது பங்கிற்கு மேலும் ரூ.7 வரை வாட்வரியை குறைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

இதனால் புதுவையில் பெட்ரோல்-டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.12.85 குறைந்து ரூ.94.94-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போன்று டீசல் விலை ரூ.19 குறைந்து ரூ.83.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதுவை மாநிலத்தின் பிராந்தியங்களான காரைக்காலில் பெட்ரோல் விலை ரூ.94.65, மாகியில் 92.52, ஏனாமில் 95.59 இன்று விற்பனை செய்யப்படுகிறது. மாகியில் டீசல் விலை ரூ 80.94 ஆகும்.

பெட்ரோல்-டீசல் மீதான வாட்வரியை புதுவை அரசு குறைத்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த வரி குறைப்பானது அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தீபாவளி பரிசாக அமையும்.

இதனால், கொரோனா தொற்றால் முடங்கி கிடக்கும் வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மீண்டும் புத்துயிர் பெறும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools