X

புதுச்சேரியில் பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரிப்பு

புதுவை என்றவுடன் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மது வகைகள் தான். இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்படும் மது வகைகள் என சுமார் 900 பிராண்ட் மது வகைகள் புதுவையில் விற்பனையாகிறது.

புதிய பிராண்டு மது வகைகளை ருசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்தும், பிரெஞ்சு காலனி நாடுகளின் பகுதிகளில் இருந்தும் மக்கள் புதுவைக்கு படையெடுத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் மது வகைகளை விட குளிர்ச்சியான பீர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு பீர் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து வரும் பீர் வகைகளும் புதுவையில் விற்பனை ஆகிறது. 33 பிராண்ட் பீர்கள் புதுவையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 5 பிராண்டுகள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வருபவையாகும்.

கோடை காலம் தொடங்கி விட்டதாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருப்பதாலும் மது பிரியர்கள் பீருக்கு தற்போது மாறி உள்ளனர். புதுவையின் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பீரை ருசி பார்க்கின்றனர். இதனால் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

பொதுவாக வரும் அனைத்து பீர்களும் பார்லியில் செய்யப்படும். பார்லி தவிர்த்து அரிசி, கோதுமையிலும் செய்யப்படும் பீர்களும் கிடைக்கிறது. வழக்கமாக மாதத்திற்கு சுமார் 2 லட்சம் பாக்ஸ் பீர்கள் புதுவையில் விற்பனையாகும். தற்போது மாதத்திற்கு 2½ லட்சம் பாக்ஸ் பீர் என விற்பனை உயர்ந்துள்ளது.

புதுவை அண்ணா சாலையில் ஒரு தனியார் நிறுவனம் மைக்ரோ பீர் தொழிற்சாலை மூலம் பீர் தயாரிக்கிறது. இங்கு பீர் தயாரிப்பை நேரடியாக வாடிக்கையாளர்கள் பார்த்தபடியே பீர் அருந்தலாம். இங்கு மாம்பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெரி என பல வகைகளில் பீர் கிடைக்கிறது.

பீர் விற்பனை தொடர்பாக மொத்த விற்பனையாளரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

வழக்கமாகவே கோடை காலத்தில் மதுவை விட பீர் விற்பனை அதிகரிக்கும். இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் பீர் விற்பனை மேலும் அதிகரித்துள்ளது. வழக்கமாக படிப்படியாக அதிகரிக்கும் பீர் விற்பனை தற்போது கோடை காலம் தொடங்கிய உடனே அதிகரித்து உள்ளது.

இதற்காக ஜனவரி மாதத்தின் இறுதியில் இருந்து மதுபான தொழிற்சாலைகளில் பீர் ஆர்டரை அதிகரித்துள்ளோம். இந்த ஆண்டு 3 புதிய பீர்கள் அறிமுகமாகி உள்ளது. வழக்கத்தை விட சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளது. அடுத்தமாதம் பீர் விற்பனை மேலும் அதிகரிக்கும். 3 லட்சம் பாக்ஸ் பீர் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.