Tamilசெய்திகள்

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு! – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி, உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்மிஸ்ராவின் மகன் மற்றும் ஆதரவாளர்கள் வாகனத்தை ஏற்றி 4 விவசாயிகளை கொன்றனர்.

இதுகுறித்து இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதால் ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

புதுவையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வாபஸ்பெற ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. புதுவை மாநில தேர்தல் ஆணையர் பணிக்கு தகுதியில்லாதவர் தாமஸ். ஆணையர் தன்னிச்சையாக தேர்தலை அறிவிப்பதும், தவறு நடந்துவிட்டது என தேர்தலை நிறுத்துவதும் புதுவை அரசுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைக்குட்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்.

புதுவையில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவையில் 3 நம்பர் லாட்டரி, கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.