புதுக்கோட்டை தொழிலதிபர் கொலை வழக்கு – 8 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஆவுடையார்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் நிஜாம் (வயது 52). இவர் ஆப்டிக்கல் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 24-ந்தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
மேலும் இவரது மனைவி ஆயிஷா பீவியை கட்டிப்போட்டு பீரோவிலிருந்த 170 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன், ஆய்வு மேற்கொண்டு 6 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
அதன்பேரில் தனிப்படை போலீசார் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சைஆகிய மாவட்டங்களுக்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தொழில்முனைவோர் யாரேனும்கூட தொழில் போட்டி காரணமாக இந்த கொலை சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருந்தனர்.
3 டி.எஸ்.பி.க்கள், 2 ஏ.டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான இந்த தனிப்படை போலீசாரின் அதிரடி விசாரணையில் தற்போது 8 பேர் கும்பல் சிக்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை சேர்ந்த கதிரவன், லோகேஷ், பட்டுக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீகாந்த், சூரியா, ஜெயப்பிரகாஷ், ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்த ஷேக் முகமது, நாகையை சேர்ந்த முகமது யூனுஸ், உசிலங்காட்டை சேர்ந்த ரதீஷ் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த கும்பலிடம் இருந்து கொள்ளைபோன 170 பவுன் நகைகளில், 120 பவுன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமறைவான ஒருவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகிறார்கள்.