புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் 7 வயது மகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் திடீரென காணாமல் போனார். சிறுமியை பெற்றோரும் உறவினர்களும் அக்கம்பக்கத்தில் தேடினர். ஆனால், கிடைக்கவில்லை. எங்கேவாது விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார் என்று பெற்றோர் எதிர்பார்த்தனர். ஆனால், இரவு ஆகியும் சிறுமி வீட்டுக்கு வரவில்லை.
இதையடுத்து பெற்றோரும் உறவினர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தநிலையில், சிறுமியின் உடல் கருவேல மரங்கள் நிறைந்த புதர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது. அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த வழக்கு தொடர்பாக ராஜேஷ் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்துவருகிறார்கள். 7 வயது சிறுமிக்கு நேர்ந்த இந்தக் கொடூரத்தை சமூக ஊடங்களில் பதிவிட்டு, பலரும் நீதி கேட்டு வருகிறார்கள்.