Tamilசெய்திகள்

புதுக்கோட்டை அருகே பயங்கர விபத்து – ஐயப்ப பக்தர்கள் 5 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக போலீஸ் நிலையத்துக்கு எதிரே ஒரு டீக்கடை, பேக்கரி உள்ளது. இந்த வழியாக வாகனங்களீல் செல்வோர், சுற்றுலா பயணிகள், கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் பேக்கரி முன்பாக வேனை நிறுத்தி டீ குடித்து செல்வது வழக்கம்.

இன்று அதிகாலை இந்த கடை முன்பாக சென்னை, திருவள்ளூரில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு மாலை அணிந்த பக்தர்கள் வந்த வேன், அதே பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் வந்த மற்றொரு வேன், திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் சென்ற மற்றொரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வேன்கள், காரில் வந்த 25 பேர் பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அரியலூரில் இருந்து சிவகங்கைக்கு சிமெண்ட் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்றது. லாரியை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டினார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீதும், சாலையோரம் நின்றிருந்த 2 வேன், கார் மீதும் பயங்கரமாக மோதியது. மேலும் அருகே இருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருவள்ளூர் மாவட்டம் திருவெல்லைவயல் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் (வயது 26), ஊத்துக்கோட்டை பனையன்சேரியை சேர்ந்த ஜெகநாதன் (60), வேனில் அமர்ந்திருந்த ஓம் சக்தி கோவில் பக்தரான சீனிவாசன் மனைவி சாந்தி (55), மதுரவாயல் அன்னை இந்திரா நகர் தெரு சுரேஷ் (34), சென்னை அமைந்தகரை சதீஷ் (24) ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயம் அடைந்தனர்.