புதிய ரோபோ கண்டுபிடித்து சென்னை ஐஐடி சாதனை
சென்னை ஐ.ஐ.டி. ‘என்ஜினீயரிங் டிசைனிங்’ துறையின் ‘ரோபோ’ லேப் பிரிவினர் தொழிற்சாலை பணிகளுக்கான புதிய ‘ரோபோ’வை கண்டுபிடித்து இருக்கின்றனர். பொதுவாக மனித வடிவிலான ‘ரோபோ’க்கள் சில குறிப்பிட்ட பணிகளை மட்டுமே செய்யும். ஆனால் இந்த வகையான ‘ரோபோ’ சாதாரண பணிகளுக்கும், தொழிற்சாலை பணிகளுக்கும் பயன்படுத்த முடியும்.
இந்த ‘ரோபோ’வை ‘என்ஜினீயரிங் டிசைனிங்’ துறையின் ‘ரோபோ’ லேப் பிரிவு தலைவர் அசோகன் தொண்டியாத் மற்றும் ஆராய்ச்சி மாணவர் நாகமணிகண்டன் கோவிந்தன் ஆகியோர் கண்டுபிடித்து இருக்கின்றனர். பேராசிரியர் அசோகன் தொண்டியாத் அறுவை சிகிச்சை செய்யும் ‘ரோபோ’ கண்டுபிடித்து பிரபலமானவர்.
‘ரோபோ’க்கான காப்புரிமை பெற தற்போது முயற்சி எடுத்து வருகின்றனர். அந்த பணிகள் முடிவடைந்து விரைவில் இந்த ‘ரோபோ’ பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சி மாணவர் நாகமணிகண்டன் கோவிந்தன் கூறுகையில், ‘தொழிற்சாலைகளில் குழாய் இணைப்பு பணிகளில் இந்த ‘ரோபோ’வை பயன்படுத்த முடியும். மேலும் இயற்கை பேரிடர் காலங்களில் தேடுதல் மற்றும் மீட்புக்காகவும் இதை பயன்படுத்தலாம். நமக்கு எந்த அளவில் தேவைப்படுமோ? அதற்கு ஏற்றாற்போல் வடிவமைத்து கொள்ளலாம்’ என்றார்.