புதிய தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அடிக்கல் நாட்டு விழா – கங்குலி பங்கேற்பு
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதான வளாகத்தில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெங்களூருவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி அமைக்கப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அடிக்கல்லை நாட்டினர். பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பொருளாளர் அருண் துமால், இணைச் செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ், விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
தேவனஹள்ளி பகுதியில் 40 ஏக்கரில் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி, ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்படும்.
உள்நாட்டுப் போட்டிகளை நடத்தக் கூடிய மூன்று மைதானங்களுடன் இது அமைகிறது. இதற்கான நிலத்தை கிரிக்கெட் வாரியம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்றுள்ளது.
இளம் வீரர்களிடையே திறமைகளை வளர்த்தெடுக்கவும், இந்தியாவில் கிரிக்கெட் சூழலுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் ஒரு சிறப்பு மையத்தை உருவாக்குவது எங்களின் நோக்கம் என ஜெய் ஷா தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.