X

புதிய கண்டுபிடிப்புகள் குறித்த மென்பொருள் தரவுகளை சீனா திருடி வருகிறது – ஃபை ஐஸ் அமைப்பு குற்றச்சாட்டு

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளின் உளவு அமைப்புகளின் கூட்டமைப்பு, ஐந்து கண்கள் எனப்படும் “ஃபை ஐஸ்” (Five Eyes).

இந்த 5 நாடுகளில் உள்ள பெருவணிக நிறுவனங்களின் வியாபார தந்திரங்கள், தொழில் ரகசியங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த மென்பொருள் தரவுகளை சீனா மறைமுகமாக கைப்பற்றி வருவதாக “ஃபை ஐஸ்” குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் (Stanford University) நடைபெற்ற ஒரு சந்திப்பில் இங்கிலாந்தின் உளவு பிரிவான எம்ஐ5 (MI5) அமைப்பின் தலைவர் கென் மெக்கல்லம் (Ken McCallum) உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

மிக பரந்த அளவில் மிக மிக முக்கிய தொழில்நுட்பங்கள் களவாடப்படுகின்றன. அரசாங்கத்தின் ரகசியங்களை உளவாளிகள் கைப்பற்றுவதுதான் இதுவரை நடந்து வந்தது. ஆனால் தற்போது சிறு மற்றும் “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் மற்றும் பெரும் பல்கலைகழகங்கள் ஆகியவை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் திருடப்படுகின்றன.

சமூக வலைதளங்களில் இங்கிலாந்தில் உள்ள மக்களை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன உளவாளிகள் குறி வைத்து அவர்களிடம் நட்பை வளர்த்து செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நுட்பமான நுண்ணிய முக்கிய தகவல்களை கேட்டு பெறுகிறார்கள். கண்டறிய கடினமான முறையில் தங்கள் செயல்பாட்டை மறைத்து கொண்டு சீனர்கள் செயல்படுகின்றனர். உலகையே மாற்றும் சாத்தியம் உள்ள இத்தகைய கண்டுபிடிப்புகளை தங்களுக்கே சொந்தமாக்கி கொள்ள மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் பெறும் தகவல்களை கொண்டு நாடுகளுக்கு இடையேயான அரசியல்களிலும் ஒவ்வொரு நாட்டின் உள்நாட்டு அரசியலிலும் அவர்கள் விரும்பும் அழிவை கொண்டு வரவும் முடியும்.

இவ்வாறு கென் தெரிவித்தார்.

ஃபை ஐஸ் அமைப்பின் மற்ற தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.

Tags: tamil news