X

புதிய கட்சியை அறிவித்தார் நடிகர் விஜய் – ‘தமிழக வெற்றி கழகம்’

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் கட்சிகளில் இருப்பது போல் இயக்கத்தில் பல அணிகளும் உருவாக்கப்பட்டு மக்கள் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்தில் புயல் மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சியின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று செய்தி பரவி வந்தது. இதையடுத்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Tags: tamil cinema