புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ள சியோமி நிறுவனம்
சியோமி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் SU7 பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் செடான் மாடல் பி.எம்.டபிள்யூ. i4 மற்றும் டெஸ்லா மாடல் 3 போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. இதன் விற்பனை சீனாவில் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் துவங்க இருக்கிறது. புதிய சியோமி SU7 அளவீடுகளை பொருத்தவரை 4997mm நீளம், 1963mm அகலம், 1440mm உயரம் மற்றும் 3000mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் கார் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் ரியர் வீல் டிரைவ் வெர்ஷன் 299 ஹெச்.பி. பவர் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. டூயல் மோட்டார்கள் கொண்ட 4-வீல் டிரைவ் வேரியண்ட் 637 ஹெச்.பி. பவர் கொண்டிருக்கிறது. இந்த வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 265 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
சியோமி SU7 மாடலில் இருவித பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி என்ட்ரி லெவல் கார்களில் பி.ஒய்.டி.-இன் லித்தியம் ஐயன் ஃபாஸ்பேட் பேட்டரியும், விலை உயர்ந்த மாடலில் CATL ரக பேட்டரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த பேட்டரிகளின் திறன் மற்றும் ரேன்ஜ் பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
டிசைனை பொருத்தவரை சியோமி SU7 மாடல் அதிநவீன மெக்லாரென் ரக கார்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லைட்கள் மெல்லியதாகவும், பொனெட் டேப்பர்கள் மெக்லாரென் மாடல்களில் உள்ளதை போன்றும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடல் 19-இன்ச் மற்றும் 20-இன்ச் வீல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.